மனிதன் மட்டுமல்லாமல் மொழிகளுக்கும் தாயாக திகழ்பவளே...
உன்னை எண்ணுகையில் நினைவிற்கு வந்தது
சமூக அறிவியல் ஆசிரியர் சொன்னது...
"தாயின் முகம்தான் தமிழ்நாடு வரைபடமாம்,
அதில் நெற்றிப்பொட்டுதான் சிங்கார சென்னையாம்..."
குமரிக்கண்டத்தில் பிறந்து முச்சங்கத்தில் வளர்ந்து
வள்ளுவனின் வரிகளில் வான்மறையை வழங்கி
தமிழன்னையாய் திக்கெட்டும் திகழ்பவளே...
நீ அணிந்திருந்த முத்துகளில் சிதறவிட்டு
சென்றவையோ பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்...
திசையறியாமல் திக்கற்று திரிந்தாலும்
தாயன்பால் அரவணைத்து தடம் மாறாமல்
'தடம்' பதிக்கச்செய்தாய் அன்பு, பாசம், கருணை, பரிவு
என்று தாயிலக்கணம் கூறும் மானுடர்களிடம் கேட்கவேண்டும்...
உன்னிடமிருந்து வகுக்கப்பட்டவையா?என்று...
இப்புவியில் இன்னொரு ஜனனம் இருக்குமெனில்...
பிறக்க வேண்டும் மீண்டும் உந்தன் புதல்வியாய்...