அலையாடும் ஆழியின் நடுவில் வான்மதியின் நிழலைக் கண்டேன்
மலையாடும் வானின் நடுவில் மழைமேகம் தவழக் கண்டேன்
வளியாடும் இலைகளின் நடுவில் பொன்வண்டின் நிழலைக் கண்டேன்
மணமாடும் இதழ்களின் நடுவில் மகரந்த சேர்க்கை கண்டேன்
வான்முட்டும் மலையைக் கண்டேன் தேன்சொட்டும் மலரைக் கண்டேன்
வைகறை பொழுதினிலே விடிவெள்ளி வெளிச்சம் கண்டேன்
நீர்வாசம் வீசக் கண்டேன் பாரெங்கும் நேசம் கண்டேன் கவிபாடும்
வரிகளின் நடுவில் நின் வாசம் கண்டுகொண்டேன் ஆழ்கடல்
நடுவினிலே பேரமைதி வீசக் கண்டேன் மௌனம் என்னோடு
பேசக் கண்டேன் தனிமையின் நாதம் வேதமெனக் கண்டேன்
தவிர்க்க முடியா பாடமெனக் கண்டேன் வெற்றுக் குட்டையில்
தெப்பம் கண்டேன் எரிமலை வெளியிலே வெப்பம் கண்டேன்
பார்த்துப் பார்த்து பரவசம் கண்டேன் இன்னும் பார்க்க
அவசரம் கொண்டேன் ஒவ்வொரு அணுவிலும் அதிசயம் கண்டேன்
புவியில் இயற்கையின் காதல் கண்டேன் யாவும் இங்கே
மாயம் கண்டேன் யாவையும் காதலிக்க கற்றுக் கொண்டேன்.