காலை மணி அடித்தவுடன் தமிழ்த்தாய்க்கு வாழ்த்துரைக்கும்
எங்களுக்கு வகுப்பறைகளே கற்பகிரகம்!
ஆசானின் பேதமற்ற பாடங்களே எங்களுக்கு
வேதங்கள் கரும்பலகைக்கு காவல், தெய்வங்கள்!
பாடத்தோடு பாசம் கற்றோம் அன்னையின் அடுக்குச்
சாப்பாட்டுடன் அவள் அன்பையும் பறிமாறிக்கொண்டோம்!
மாலை நேரங்களில் சாலையோரங்களில் ஆரவாரமற்றுப்
பூத்துகுலங்கிய ஆவாரம் பூக்களோடே பூப்பெய்தினோம்!
மீண்டும் மணியோசை கேட்க; விடியலை நம்பி வீடு திரும்பினோம்!
வள்ளுவனின் இருவரிக் கவிதையைக்கூட கள்ளத்தனமாய்
எங்களைப் போல் காபி அடித்திருப்போர் இல்லை!
சிலப்பதிகாரத்திற்கு ஓசை தந்தோம்; கம்பனுக்கு காதல்
கற்றுக் கொடுத்தோம்; பாரதியின் மீசைக்கு வீரம் வளர்த்தோம்!
கருத்துக்கு வலு சேர்த்தோம்; தோளுக்குத் தோழமை தந்தோம்;
வேரூடிய வசந்தங்களைப் பதியமிட்டோம்!
களங்கமற்ற நாங்கள் கலங்கியதாய் நினைவில்லை சேமித்து வைத்த
எங்கள் இன்பத்துக்கு எந்த அரசாங்கமும் வரிவிதிக்கவில்லை!
நாலாறு ஆண்டுகள் எங்கள் நட்பு கற்சிற்பமாய் இதயத்தில் நினைவு!
நாங்கள் பெற்ற மகிழ்ச்சி எங்கள் பிள்ளைகளுக்கும் கிடைக்க வரம் தா இறைவா!